சான்றோன்

...எனும் ஒற்றைச் சொல்!

ஆப்பிரிக்காவில் சாதிமுறை

 

இந்தக் கட்டுரை, திரு ப்ரவாஹன் அவர்களால் காலச்சுவடு இதழில் எழுதப்பட்டது. (Click to read Kalachuvadu Magazine)

ந்தியச் சமூகத்தில் ஒரு புதிராகவே இருந்துவருகின்ற சாதி அமைப்பின் தோற்றம் தொடர்பான அனைத்து ஆய்வுகளும் ஆரியர்களுடன் தொடர்புபடுத்தியே பார்க்கப்படுகின்றன.    இன்னும் ஆரியர்கள் புகுத்திய வர்ணங்களின் கலப்பில்தான் நூற்றுக்கணக்கான சாதிகள் தோன்றியதாகக் கருதப்படுகிறது.   இதற்குக் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வாக்கில் இயற்றப்பட்ட,   தற்போது நடப்பில் உள்ள,   மனுதர்ம சாஸ்திரம் அடிப்படை எனக் கூறப்படுகிறது.

ஆரியர்கள் இந்தோ-ஐரோப்பிய மொழிகளைப் பேசிய வெள்ளை நிறம்கொண்ட இனக் குழுவினர் என்பது மானுடவியல் மற்றும் மொழியியல் அறிஞர்களின் கருத்தாகும்.    இந்தோ- ஐரோப்பிய மொழிக் குழு எனக் கூறும்போதே இந்தியத் தொடர்பற்ற பிற ஐரோப்பிய மொழிக் குழுவினரிடம் சாதி அமைப்பு காணப்படவில்லை என்பதையும் உய்த்துணர்ந்துகொள்கிறோம்.    சாதி அமைப்பு இந்தியச் சமூகத்திற்கு - குறிப்பாக இந்து மதத்திற்கு - உரியது என்ற கருத்துடன் இந்து மதத்தின் சாரமே சாதிதான் என்றும் சாதி இன்றி இந்து மதம் இல்லை என்றும் கருதப்படுகிறது.    இந்து மதத்தின் வழிபாட்டு நெறிமுறைகளையும் சமூகச் சட்டங்களையும் சாஸ்திரங்கள் வகுத்து நடைமுறைப்படுத்துகின்ற அதிகாரத்தைத் தம்மிடத்தில் வைத்துள்ள பார்ப்பனச் சாதி,   இந்து மதத்தின் தலைமைச் சாதியாக இருப்பதால் இந்து மதமே பிராமண மதம் என்றும் அழைக்கப்படுகிறது.

வர்ணாஸ்ரம அமைப்பு,  வர்ணம் அல்லது நிறம் சார்ந்தது என்பது அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.   இந்தக் கருத்தின் அடிப் படையில் பார்த்தாலும் பார்ப்பனரின் நிறம் வெள்ளை என்பதுடன் அதுவே உயர்ந்த குணமாகிய சத்வ குணத்தின் நிறமும் எனவும் இந்து மத நூல்களில் கூறப்பட்டுள்ளது.    இதுவும் இந்து மதத்தைப் பிராமணிய மதம் எனக் குறிப்பிடுவதற்கான தர்க்கவியல் அடிப்படையை நிறுவுகிறது.

 

வர்ணாஸ்ரம அமைப்பின் அடிமட்டத்தில் உள்ள சூத்திரர் மற்றும் இதற்குள் அடங்காத பஞ்சமர்களின் நிறம் கருப்பு என்பதும் இந்து மதத்தின் ஆதார நூல்களில் கூறப்பட்டுள்ளது.   எனவே வந்தேறிகளாகிய இந்தோ - ஐரோப்பிய வெள்ளை நிற இனக் குழுவினர் கருப்பினப் பூர்வகுடிகளை (திராவிடர் என்றோ பகுஜன் என்றோ அந்தந்தப் பிரதேசங்களின் சிறப்புக் கூறுகளின்படி அழைத்துக்கொள்வது அரசியல் ரீதியில் சரியானதாகக் கருதப்படுகிறது) நயவஞ்சகமாக அடிமைப்படுத்தித் தமது சாதிய மேலாண்மையை நிலைப்படுத்திக்கொண்டனர் என்றொரு வரலாற்றுச் சித்திரம் இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவிலும் வரலாற்று அறிஞர்கள்,   மானுடவியல் அறிஞர்கள், சமூகவியல் அறிஞர்கள் ஆகியோராலும் பரவலாக ஏற்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட கருத்தின் பலவீனங்களை ஆய்வாளர்கள் இதுவரையில் விமர்சனத்துக்கு உட்படுத்தவில்லை.

 

 

எடுத்துக்காட்டாக,  பிராமணர், க்ஷத்ரியர்,  வைசியர்,  சூத்திரர் என்ற வர்ணங்களின் பெயர்களுக்கான வேர்ச் சொற்கள் இந்தோ- ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை அல்ல.

ஆப்ரஹாம் அல்லது இப்ராஹிம் என்ற தொன் மூதாதையரின் பெயர்கள் செமிட்டிக் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஹீப்ரூ மொழிக்குரியவை.    ஆப்ரஹாம் என்பதை அல் ப்ரஹ்மா என்று பிரிக்கலாம்.   அல் எனும் சொல் ஆங்கிலத்தில் உள்ள the  என்ற முன்னொட்டு ஆகும்.   எனவே 'பிராமண' என்ற சொல்லுக்கும் இதற்கும் உள்ள தொடர்பு வெளிப்படையானது.   எவ்வாறெனில் பப்பா (bappa),  வாப்பா (vappa),  பாபு (bapu) போன்ற சொற்கள் தந்தையைக் குறிக்கும்.   இவையெல்லாம் ப்ரஹ்மா,  பம்மா (bamma) என்ற சொல்லுடன் தொடர்புடையவை.   'க்ஷத்ரிய' என்ற சொல் 'கத்தி' என்ற சொல்லுடன் தொடர்புடைது.   க்ஷத்ரியவாடா என்ற பகுதி குஜராத்தில் கத்தியவார் எனப்படுகிறது.   க்ஷத்ரியர்கள்,   நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் 'கத்தியர்'  எனக் குறிப்பிடப்படுகின்றனர்.  

துருக்கி நாட்டில் வழங்கிவந்த பண்டைய ஹிட்டைட் மொழியில் கத்தி என்பது பொது ஆயுதப் பெயராகும். 'க்ஷத்ர'  என்பதும் சம்ஸ்கிருதத்தில் ஆயுதத்தைக் குறிக்கும்.  'க்ஷத்ரிய' என்னும் இச்சொல் 'கத்தி' என்ற சொல்லின் சமஸ்கிருதமயப்பட்ட வடிவாக இருக்க வேண்டும்.  எனவே க்ஷத்ரிய என்னும் சொல்லும் இந்தோ - ஐரோப்பிய மொழிச் சொல்லிலிருந்து தோன்றியதல்ல.

அடுத்ததாக,  வைசியர் என்ற சொல் 'விஸ்',  'விஸ்வம்' என்ற வேர்ச் சொற்களுடன் தொடர்புடையதாகும்.  வைசியர் என்ற சொல்லுக்கு உலகப் பொது மக்கள் என்று பொருள்.   அதாவது அடிமைகளல்லாத சுதந்திர உலகக் குடிமக்கள் வைசியர் எனப்பட்டனர்.   இச்சொல் வியன் (விரிந்த), வையம் (பரந்த உலகு) என்னும் தமிழ்ச் சொற்களுடன் தொடர்புடையது.   எனவே வைசியர் என்ற சொல் திராவிட மொழியைச் சார்ந்த வேர்ச் சொல்லிலிருந்து தோன்றியிருக்கலாம்.   இறுதியாக,  சூத்திர (அ) தஸ்யு என்ற சொல்லுக்கு தசா (அடிமை)  என்று பொருள்.   இச்சொல் 'தாஹா' என்ற வடிவில் ஆப்கான் பகுதியில் வழங்குகிறது.   இதன் பொருள் மனிதன் என்பதாகும்.

ஆரியர்களால் முதன்முதலில் அடிமைப்படுத்தப்பட்டவர்கள் இந்தத் தாஹா இனக் குழுவினராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.    இங்கு நாம் சொல்ல விழைகின்ற கருத்து என்னவெனில் வர்ணங்களுக்கு உரிய பெயர்கள் நான்குமே இந்தோ - ஐரோப்பிய மொழி வேர்ச் சொல்லிலிருந்து தோன்றியவை அல்ல என்பதுதான்.    அப்படியானால் வர்ணாஸ்ரம அமைப்பு என்பதும் குறிப்பாக தலைமை வர்ணப் பிரிவினராகிய பிராமணர் என்ற சாதிப் பிரிவும் இந்தோ - ஐரோப்பிய மொழிக் குழுக்களின் வாழ்க்கை முறையிலிருந்து தோன்றியிருக்க வாய்ப்புண்டா என்பதுதான் கேள்வி.   மேலும் ஆரியர்களுக்கு உரியதான ரிக் வேதம் காட்டுகிற சமூக அமைப்பு அதிகபட்சமாக இனக் குழுச் சமூக அமைப்புடன் வீரயுக மட்டத்திற்குதான் வளர்ச்சியடைந்திருந்தது எனும்போது அவர்களிடம் வேலைப் பிரிவினை என்பதெல்லாம் அமைந்திருப்பது சாத்தியமா?

இச்சிக்கல் ஒருபுறமிருக்க,   நான்காம் வர்ணமாக சூத்திர வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் என்று இந்து மத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள கருப்பு நிற இனக் குழுக்களிலும் கடுங்கருப்பு நிற இனக் குழுவினராகிய ஆப்பிரிக்க மக்களிடையே நிலவிவருகின்ற சில சமூக அமைப்புக் கூறுகளையும் வரையறைகளையும் ஆராயும்போது இந்த ஆய்வுச் சிக்கலுக்குப் புதிய பரிமாணமேகிடைக்கிறது.   இந்தியச் சாதி அமைப்புக் குறித்து ஆராய்கின்ற அறிஞர்கள் இந்த நிதர்சனமான நிலவரம் குறித்த அறியாமையில் இருப்பது நமக்கு வியப்பாகவே உள்ளது.

 

ஆப்பிரிக்காவில் சாதிகள்

 

 

னிதச் சமூகம் முதன்முதலில் தோன்றிய ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள பல இனக் குழுக்களில் (ethnic groups) சாதி முறை இன்றைக்கும் ஏதோவொரு வடிவில் நிலவிக்கொண்டிருக்கிறது.   பிறப்பின் அடிப்படையில் அமைந்த தொழிற்தேர்ச்சி பெற்ற தனக்குள்ளேயே மணவுறவைக் கொண்டுள்ள குழுவே 'சாதி' என்று வரையறுக்கப்படுகிறது.   இத்துடன் கூடுதலாக இத்தகைய குழுக்கள் பல்வேறு சமூகத் தடைகளுக்கும் பாரபட்சங்களுக்கும் ஆட்படுவது வழமையாக உள்ளது.    இத்தகைய சாதிச் சமூகம் தொடக்கக் கட்ட சமுதாயங்களில் காணப்படுகிற வேலைப் பிரிவினை சார்ந்தது என்று கார்ல் மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

 

 

இது ஓரளவுக்குப் பொருத்தமே எனினும் முழுமையானதல்ல.   இதில் பொருளாதார அம்சம் மட்டுமே வலியுறுத்தப்படுகிறது.   சாதி ஒரு சமூக அமைப்பு என்பதில் எவரும் கருத்து வேறுபடுவதில்லை.   ஒவ்வொரு சமூகமும் தனக்கேயுரிய சமூக அமைப்பைக் குறிப்பிட்ட சமூகப் பொருளாதார நிலைமைகளுக்குத் தக்கப்படி உருவமைத்துக்கொள்கிறது.   அந்நிலைமைகள் மாறும்போது புதிய நிலைமைகளுக்குத் தக்க புதிய அமைப்பை ஏற்படுத்திக்கொள்கிறது.   ஆனால் சாதி, பிறப்பு சார்ந்து இருப்பதால் சமூகப் பொருளாதார நிலைமைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுவிட்ட பின்னரும் அவ்வாறே நீடிக்கிறது.  

 

 

ஆப்பிரிக்கக் கிழக்கு எல்லையான எத்தியோப்பியாவில் தொடங்கி சூடான்,  மாலி,  மருஷியானா,  கேம்பியா,  கினி,  பிஸா,  ஐவரி கோஸ்ட்,  நைஜர்,  பர்க்கினாஃபாஸோ,  கேமரூன்,  கானா,  லைபீரியா,  சியரா லியோன்,  அல்ஜீரியா,  நைஜீரியா,  சாட் என மேற்கெல்லையான செனகல் வரையிலும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் படிநிலைச் சாதியமைப்பு நிலவிக் கொண்டிருக்கிறது.   இந்தச் சாதிக் குழுக்கள் எதிர்கொள்ளும் பல வகை ஒதுக்குதல்களும் ஒடுக்குமுறைகளும் பல நேரங்களில் இந்தியாவில் நிகழ்பவற்றைவிடக் கடுமையானவை.   இதற்கு அந்தச் சமூகங்கள் வளர்ச்சி பெறாமல் பழைய நிலைமைகளிலேயே நீடித்துக்கொண்டிருப்பதே காரணம்.

 

 

ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படும் சாதி முறைகளை மூன்றாக வகைப்படுத்தலாம்.   செனகல் நாட்டின் ஓலோஃப் (Wolof) சமூகம்,   எத்தியோப்பிய கேமோ (Gamo) சமூகம் மற்றும் மேற்கு-மத்திய ஆப்பிரிக்காவின் மண்டே (Mande) மொழி பேசுகிற மக்கள் சமூகம் ஆகியவற்றில் உள்ள சாதி முறையை ஒரு வகையாகவும்,   நைஜீரிய ஓசு (Osu),   சோமாலிய சாப் (Sab) சாதி முறைகளை மற்றொன்றாகவும்,   ருவாண்டா மற்றும் உகாண்டா நாடுகளின் வகையை மூன்றாவதாகவும் கூறலாம்.   இவற்றிற்கு இடையில் உள்ள பொதுமைகள் இவை ஒரே அமைப்பு முறையின் மாறுபட்ட திரிந்த வடிவங்களாக இருக்க வேண்டும் எனக் காட்டுகின்றன. இவற்றில் முதல் வகை இந்தியச் சாதி முறையைப் பெரிதும் ஒத்திருக்கிறது.   அதாவது ஒரே இனக் குழுவுக்குள்ளேயே இந்தியச் சாதி அமைப்பில் காணப்படும் பிறப்பு,  படிநிலை,  தொழில்,  அகமண முறை (தங்கள் சாதிக் குழுவுக்குள்ளேயே மணம் செய்துகொள்வது),  தீட்டு,  பிரிவினை,  சமூக நிகழ்வுகளில் புறக்கணிப்பு, தனிக் குடியிருப்புகள்,  தனி இடுகாடுகள்,  இடுகாடு இட மறுப்பு போன்ற அனைத்துக் கூறுகளையும் கொண்ட முதலாம் வகை.

 

 

இரண்டாவது,  நைஜீரிய ஓசு முறை.   சமூகத்தின் மற்ற அனைவரும் ஒரு பிரிவாகவும் ஓசுக்கள் எனப்படும் தீண்டத்தகாதோராகக் கருதப்படும் சாதி ஒன்றுமாகவும் இருக்கிறது.   இந்த ஓசு சாதியினர் அதே இனத்தைச் சேர்ந்தவர்களாகவும் சில நேரங்களில் வேறு இனக் குழுவிலிருந்து ஏதோ வகையில் ஓசுக்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்களுமாவர்.   சோமாலியாவில் மிட்கள் (Medgan), டுமல் (Tumal),  யிபிர் (Yibir) என்னும் சாதிகள் தாழ்ந்த சாதிகளாக உள்ளன.   சோமாலிய அரச குலங்களுக்கும் இவர்களுக்கும் இடையில் புரவலர் - சார்ந்திருப்பவர் என்ற உறவுநிலை உள்ளது.   மூன்றாவது வகை ருவாண்டா நாட்டில் உள்ள இனக் குழுச் சாதி முறையாகும்.  

 

 

இதில் ஹுடு (Hutu),   டுட்ஸி (Tutsi) என்ற இருவேறு இனக் குழுக்கள் இரண்டு சாதியினராகவும் இவ்விரு சாதிகளின் கலப்பில் பிறந்தவர்கள் ட்வா (Twa) என்ற மூன்றாவது பிரிவாகவும் உள்ளனர்.   மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ள ட்வா பிரிவினர் தீட்டு எனக் கருதப்படுகின்ற பல்வேறு தொழில்களில் ஈடுபடுகின்றனர்.   ஆளுவோராக உள்ள டுட்ஸிக்களும் விவசாயிகளாகவும் வணிகர்களாகவும் உள்ள ஹுடுக்களும் ட்வா பிரிவினரைப் பாரபட்சமாக நடத்துகின்றனர்.

 

செனகல்

செனகல் நாட்டில் உள்ள இனக் குழுக்களை மூன்று குடும்பங்களாகப் பிரிக்கின்றனர்.   டெக்ரூர் (Tekrur) குடும்பத்தில் ஓலோஃப் (36%),   டூக்ளூர் (Tukloor - 9%),   செரீர் (Sereer - 17%),   பல்பே (Fulbe - 17%),   லெபு (Lebu) மற்றும் லாபே (Lawbe) இனக் குழுக்களும், மண்டே (Mande) குடும்பத்தில் மண்டிங்கோ (Mandingo - 6%),   மாலிங்கே (Malinke - 4%),   பமானா (Bamana) மற்றும் சரகோல் (Sarakole) இனக் குழுக்களும்,   பாலியோ செனிகேம்பியன் (Paleo - senegambian) குடும்பத்தில் ஜோலா (Jola - 9%),   பசாரி (Basari),   பேனுக் (Baynuk), நூன் (Noon),   பலோர் (Palor) ஆகிய இனக்குழுக்களும் உள்ளன.   

செனகல் மக்கள் தொகையில் பெரும்பான்மையினரான (36%) ஓலோஃப் இனக் குழுவிலும் இன்னும் டெக்ரூர் மற்றும் மண்டே குடும்பங்களைச் சேர்ந்த இனக் குழுக்களிலும் தெளிவான சாதிப் படிநிலை உள்ளது.    கீர் (Geer - ஆளுவோர்/சுதந்திர மனிதர்கள்),    ஜாம் (Jaam- அடிமைகள் மற்றும் அவர்களின் வழிவந்தோர்),    நீநோ (Neeno - சாதி மக்கள்) என மூன்றாகப் பிரித்துள்ளனர்.    ஓலோஃப் இனக் குழுவில் சாதி அடுக்கில் மேல் உள்ள கீர்கள் (மண்டே இனக் குழுவில் இவர்கள் ஹோரோ (Horo) எனப்படுகின்றனர்) நிலவுடைமையாளர்களாகவும் மேன்மக்களாகவும் கருதப்படுகின்றனர்.   

இவர்களுக்கு அடுத்தபடியாக உள்ள நீநோக்களுள் முதலில் கைவினைஞர்களான டெக் (Tegg - கருமார்) ஊடெ (Uude- தோல் பதனிடுவோர்),  தச்சர்களான சீனே (Seene), நெசவாளர்களான ராப் (Rabb) என்ற படிநிலையும்,   இரண்டாவதாக கிவெல் (Gewel) (கிரியாட்ஸ்) எனப்படும் பாணர்களும் இவர்களுக்குக் கீழே மூன்றாவதாக நூலே (Noole) எனப்படும் வேலைக்காரர்களும் கோமாளிகளும் உள்ளனர்.    இவர்களுக்கு அடுத்த நிலையில் ஜாம் எனப்படும் அடிமைகள் உள்ளனர்.    இந்த அடிமைகள் உழுகுடிகளாகவும் பயன்படுத்தப்படுகின்றனர்.    சில நேரங்களில் மேன்மக்களான கீர் பிரிவில் உள்ள விவசாயிகளின் பொருளாதார நிலை,    தாழ்ந்த சாதிகளாகக் கருதப்படும் நீநோக்களையும் கிரியாட்டுகளையும் (Griots) விடக் கீழ்நிலையில் இருந்தாலும் சமூக ரீதியில் அவர்கள் மரியாதைக்குரியவர்களாகவே உள்ளனர்.    செனகல் நாட்டின் மக்கள் தொகையிலேயே 9% உள்ள ஜோலா மற்றும் பசாரி போன்ற பாலியோ செனிகேம்பியன் இனக் குழுக்களில் சாதி முறை இல்லை என்பதும் இந்த இனக் குழுக்கள் மிகப் பழமையானவை என்பதும் குறிப்பிடத்தக்கவை.

 

கிரியாட் எனப்படும் பாணர்கள் அவ்வப்போது தீண்டத்தகாதோராக, ஊருக்கு வெளியே வசிக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இவர்கள் கிராமத்திற்குள் வசிப்பது கிராமத்திற்கு அழிவைக் கொண்டுவரும் எனக் கருதப்படுகிறது. இவர்களுக்கு இடுகாடுகளும் மறுக்கப்படுகின்றன.

 

நிலவுடைமையாளர்களான கீர்களின் நம்பிக்கைப்படி புனிதமான இந்தப் புவி தீட்டுக்குரிய இவர்களைத் தாங்காது என்பதே இதற்குக் காரணமாகும். இதனால் இவர்கள் பிணத்தை மரத் தண்டின் (Trunk Baobab Tree) நடுவில் உள்ள காலியான இடத்தில் வைத்து மூடிப் புதைக்கின்றனர்.   இப்பாணர்கள் பரம்பரையாக மேல் தட்டில் உள்ள கீர்களைப் புகழ்ந்து பாடல்கள் பாடி வந்துள்ளனர்.   மேலும் கீர் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துடனும் இணைந்தாற்போலவே ஒரு கிரியாட் குடும்பம் உள்ளது.   இந்த கிரியாட்டுகள் மத்தியிலும் மேல்தட்டு கிரியாட்டுகள் என்றும் அடிமை கிரியாட்டுகள் என்றும் பிரிவினைகள் கூறப்படுகின்றன.   இதில் ஆளுவோர் சார்ந்த கிரியாட்டுகள் மேல்தட்டினராகவும் மற்றவர்கள் அடிமைகள் என்றும் சில நேரங்களில் குறிப்பிடப்படுகின்றனர்.

 

பொதுவாக இச்சாதிப் பிரிவுகள் அனைத்திலும் அகமண முறை நடப்பில் உள்ளது.   கீர்கள் தங்களுக்குள்ளேயும் நீநோக்களில் உள்ள டெக்,  ஊடே,  சீன்,  ராப் ஆகியோர் தத்தம் பிரிவுக்குள்ளேயும் கிரியாட்டுகள் கிரியாட்டுகளுக்குள்ளேயும் அடிமைகள் தமக்குள்ளேயுமே மணவுறவைக் கொண்டுள்ளனர்.   தார்மீக ரீதியில் சாதியை எதிர்ப்பவர்களும்கூடத் தங்கள் குடும்பங்களுக்குச் சிக்கல் ஏற்படும் என்பதால் பிற சாதியிலிருந்து மணந்துகொள்ளத் தயங்குகின்றனர்.   மேலும் பெயர்களின் பின்னொட்டைக் கொண்டே அவர்களின் சாதியை நாம் கண்டுபிடித்துவிடக்கூடிய நிலைமையும் உள்ளது. உதாரணமாக ம்பே (Mbaye),  ம்பௌப் (Mboup),  செக் (Seck),  தியாம் (Thiam),  நியாங் (Niang),  ங்கோம் (Ngom),  சாம் (Sam) போன்ற ஓலோஃப் சமூக கிரியாட்டுகளின் பின்னொட்டுப் பெயர்கள் அல்லது குலப் பெயர்கள்.  மண்டிங்கா கிரியாட்டுகளிடம் உள்ள இத்தகைய பெயர்கள் டையாபாட்டே (Diabate),  கோன்டே (Konte),  கௌயாட்டே (Kouyate), கொனாட்டே (Konate),  சோசி (Soce) மற்றும் பிற.

 

எத்தியோப்பியா

த்தியோப்பியாவின் தென்மேற்குப் பகுதியில் கேமோ (Gamo) இனக் குழுவுக்குள் சாதி அமைப்பு உள்ளது.    இது குறித்து அமெரிக்காவின் தெற்கு ஃப்ளோரிடா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் ஜான் ஆர்த்தர் மற்றும் காத்ரின் ஜே. வீட்மேன் ஆகியோரும் ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தின் மேத்யூ கர்ட்டிஸும் இணைந்து மானுடவியல் அகழ்வாய்வு மேற்கொண்டுள்ளனர்.   இந்தச் சமூகத்தில் காணப்படும் பிரிவினைகளையும் அவற்றின் எச்சங்களாக உள்ள பொருள்களையும் அடையாளங்காண அவர்கள் முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.   விவசாய சமூகத்தினரான கேமோ மக்களின் சாதிகள் குறித்து இவர்கள் கூறுவதாவது:

ஆப்பிரிக்க மற்றும் தெற்காசியச் சாதியமைப்பின் பல தன்மைகளுடனும் கேமோ சாதி முறை ஒத்திருப்பதாக நாங்கள் நம்புகிறோம்.   முதலாவதாக,   கேமோ சமூக அமைப்பு முறை,   சமூகத்தின் வெவ்வேறு அடுக்குகளைப் பாரம்பரியத் தொழில்களுடன் இணைத்துள்ள இறுக்கமான சமூகக் கட்டமைப்பு.   கேமோ அமைப்பு முறை மூன்று சாதிக் குழுக்களைக்கொண்டது.

1. குடிமக்கள் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் பாரம்பரியமான தலைவர்கள்,  விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள்,  2. குயவர்களை உள்ளடக்கிய குடிமக்கள் அல்லாதோர்,  3. தோல் தொழிலாளர்கள்,  கருமார் மற்றும் கல் இயந்திரம் செய்வோரை (கல்தச்சர்) உள்ளடக்கிய குடிமக்கள் அல்லாதோர்.   இரண்டாவதாகக் குறிப்பிட்ட சாதியில் உறுப்பினராவது பிறப்பால் நிர்ணயிக்கப்படுகிறது.   மூன்றாவதாக,  ஒவ்வொரு சாதிக் குழுவும் அகமண முறையைக் கொண்ட குழுவாகவும் உள்ளது.   நான்காவது, கைவினைஞர்கள் கேமோ சமூகத்தின் முழு உறுப்பினர்கள் தாங்கள் மட்டுமே அறிந்த ஆர்கோ (argot) அல்லது ஒரு சடங்கு மொழியை வைத்துள்ளனர்.   இறுதியாகக் கைவினைஞர்கள் விவசாயிகளுடன் உறவு வைத்துக்கொள்வதைத் தூய்மையின்மை,   தீட்டு என்ற கருத்தாக்கங்களின் மூலம் தடுத்துக் கைவினைஞர்களைத் தாழ்த்திவைப்பதை கேமோக்கள் வலுப்படுத்துகின்றனர்.   விவசாயிகளோ கைவினைஞர்களோ பண்பாட்டுத் தடை எதையேனும் மீறுவாராயின் அவர்கள் முன்னோர்களை நொந்துபோகச் செய்து நிலம் மற்றும் மக்களின் உற்பத்திப் பெருக்கத்தைத் தடுத்துவிடுவர் என்பது கேமோக்களின் நம்பிக்கை.

விவசாயிகளையும் கைவினைஞர்களையும் தனித் தனிச் சாதிக் குழுக்களாகச் சமூகப் பொருளாதார ரீதியில் பிரிப்பது அவர்களின் குடியிருப்புகள்,   இடுகாடுகள் மற்றும் அவர்கள் தங்களுக்குரியதாக வைத்திருக்கிற பொருள் சார்ந்த பண்பாட்டிலும் தெளிவாகத் தெரிகிறது.

எத்தியோப்பிய மக்களை இனக் குழு ரீதியாக வகைப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல என்கின்றனர் அறிஞர்கள்.   அதாவது இந்தியாவைப் போல் பல்வேறு இனக் குழுக்கள் பல விதங்களிலும் கலந்துள்ளன.   கேமோ இனக் குழுவுக்குள் இருப்பதைப் போலவே ஓமோடிக் (Omotic) மொழிக் குடும்பத்திற்குரிய மக்களின் டாவ்ரோ (Davro) ஆட்சிப் பகுதியில் காணப்படும் சாதி முறை பற்றிச் சுருக்கமாகக் காண்போம்.   டாவ்ரோவின் முந்தைய அரசாட்சியில் சமூக அடையாளங்கள் ஒவ்வொன்றும் ஏதேனும் ஒரு தொழில் சார்ந்ததாக இருந்தன.   இப்போது அவையே பொருளாதாரம்,  திருமணம்,   சடங்குகள்,   இருப்பிடம் போன்ற பல்வேறு துறைகளிலும் அன்றாட வாழ்க்கையில் பரஸ்பர வினையாற்றுதலுக்கான அடிப்படைக் கொள்கைகளாக அச்சமூகத்தில் இருந்துவருகின்றன.

மேலிருந்து கீழாக வரிசைப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சமூக அடையாளங்கள் வருமாறு:  1. மல்லா (Malla) எனப்படும் குடிமக்கள்,  விவசாயிகள் மற்றும் ஆட்சியாளர்கள்,  2. இரும்புக் கருவிகள் தயாரிக்கும் வோகாட்சே (Wogatche) மக்கள்,  3. டெகெல்லே (Degelle) எனப்படும் தோல் பதனிடுவோர்,  4. கிடாமனா (Gitamana) எனப்படும் இரும்பு உருக்குபவர்கள்,  5. மன்ஜா (Manja) எனப்படும் கரி தயாரிப்போர்,  காட்டுக் குடிகள் மற்றும் வேட்டையாடுவோர்.   இதில் குறிப்பிடத்தக்க அம்சம், இரும்பு உருக்குவோர் தங்கள் வேலையைத் தொடங்கும் முன்பு தாங்களே உரிய சடங்குகளைச் செய்துகொள்கின்றனர்.   மேலும் ஓமோடிக் மொழி பேசும் சமூகங்கள் பொதுவான ஒரு சடங்கு மொழியைக் கொண்டிருப்பதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.

 

இவையன்றி எத்தியோப்பியா முழுவதும் 60-70 சாதிக் குழுக்கள் பரவியுள்ளன.   சமூகத்தின் பிற பிரிவினரிடமிருந்து தீட்டு,   தூய்மையின்மை என்ற காரணங்களால் இவர்கள் பிரிக்கப்பட்டுள்ளபோதிலும் இவர்களில் ஒரு பிரிவினர்தான் சமூகத்தின் மற்ற பிரிவினருக்குச் சடங்குகளைச் செய்துவைக்கும் பூசாரிகளாக உள்ளனர்.

 

நைஜீரியா

நைஜீரியாவில் ஓசு சாதி முறை நடப்பில் உள்ளது. இந்த மக்கள் இக்போ (Igbo) நிலங்களில் இருக்கின்றனர். இக்போ மொழி பேசுகின்ற சமூகத்தினர் புவிக் கடவுள், சிலைக் கடவுளர்கள் மற்றும் மூத்தோர் ஆவிகளிலும் ஒரு படைப்புக் கடவுளரையும் சுக்வு (Chukwu), ஓபஸி (Obasi), சி (Chi) அல்லது சினெகெ (Chineke) என்ற உயர்ந்த கடவுள்களிலும் நம்பிக்கை கொண்டுள்ளனர். இக்போ மக்களின் முன்னோர்கள் முறைமை, நேர்மை மற்றும் கடும் உழைப்புக் கொண்டவர்கள் என்ற சமூக விழுமியங்களைக் கொண்டிருந்தனர். இக்போக்கள் தவிர இபிபோக்கள் (Ibibo), யோருபாக்கள் (Yoruba) மற்றும் இதர நைஜீரியக் குழுக்களிடத்திலும் ஓசு எனும் தீண்டாமைச் சாதி முறை நிலவுகிறது. பிற நாடுகளிலிருந்து மாறுபட்ட வகையில் ஓசுக்கள் கடவுளர்களுக்கு உரியோராகக் கூறப்படுகின்றனர். இன்னும் மிகச் சிறிய எண்ணிக்கையில் உள்ள சில தாழ்ந்த சாதிகளைக் கடவுளுக்கான பலியாடுகள் என்று சொல்கின்ற மரபு இன்றுவரை நிலவிவருகிறது.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம், ஓசுக்களும் அவர்களை ஓடுக்குவோரும் ஒரே இனக் குழுவினர் என்பதுதான். ஓசுக்களுடன் மற்றவர்கள் உடனமர்ந்து உண்பதும் மண உறவும் கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளன. அத்துடன் ஓசுக்களைத் தொடுபவர்களும் ஓசுக்களாகிவிடுவர். ஓசுக்கள் தம்மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை மீறும்போதெல்லாம் அவர்கள்மீது கடும் வன்முறை பிரயோகிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் முன்னோர்கள் விட்டுச் சென்ற கோயில்களுடன் பிணைக்கப்பட்டுள்ளனர். இக்கோயில்கள் சிலவற்றில் உள்ள கடவுளர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக இருப்பதால் பூசைகளையும் சிக்கல் நிறைந்த சடங்குகளையும் தொடர்ந்து செய்தாக வேண்டும் என்று நம்பப்படுகிறது. இந்தக் கோயில்களை அப்புறப்படுத்துவது வீட்டில் உள்ள அனைவரின் இறப்புக்கும் காரணமாகிவிடும் என்று அஞ்சப்படுகிறது. அல்லது சிலை வழிபாட்டில் உள்ளவர்களின் தாக்குதலுக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்னும் அச்சமும் உள்ளது.

இவர்களில் ஒரு சிறு பிரிவினர் தாய்க் கடவுளாக மலைப் பாம்பை வணங்குகின்றனர். மலைப் பாம்புகளை நிலத்தின் பாதுகாவலர்கள் என்று கூறுகின்ற மரபும் உள்ளது. இந்த ஓசுக்கள் வெவ்வேறு பகுதிகளில் ஒரூ (Oru), அடு-எபோ (Adu-ebo), ஒருமா (Oruma), உமே (Ume), ஓஹு (Ohu), ஓமோனி (Omoni) என வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றனர்.

மாந்தர (Mandara) என்ற பகுதியில் மட்டும் கருமார்களும் குயவர்களும்கூட ஓசுக்களாகக் கருதப்படுகின்றனர். இந்த ஓசுக்கள் கடவுளுக்குச் சொந்தமானவர்கள் என்ற நம்பிக்கையால் தொடக்கத்தில் மதிப்புடனும் மாண்புடனும் கருதப்பட்டதற்கு ஆதாரங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர் பின்னாளில் சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாகிவிட்டனர் என்கின்றனர். ஓசு சாதி முறை இக்போக்களின் மரபான மதங்களின் செயல்முறையிலிருந்து தோன்றியதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.

 

தென் மேற்கு நைஜீரியாவில் ஓஷோக்போ (Oshogbo), ஓக்போமோஷோ (Ogbomosho) என்ற இரு குழுவினர் ஒருவரையொருவர் பாரபட்சத்துடன் நடத்துகின்றனர். இருப்பினும் அவர்கள் ஒரே புவியியல் நிலப்பரப்பைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் ஓடுடுவா (Oduduwa) என்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர்.

சோமாலியா, ருவாண்டா, உகாண்டா

 

சோமாலியா

 

சோமாலியச் சமூகத்தைக் குலக் குழுக்களின் கூட்டமைப்பு எனச் சொல்லுமளவுக்கு அங்கு குலங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்தக் குலங்கள் குடும்பங்களாகவும் துணைக் குடும்பங்களாகவும் பிரிந்துள்ளன. இந்தக் குலக் குடும்பங்கள் வரையறுக்கப்பட்ட அரசியல், பொருளாதார அல்லது சமூகச் செயல்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை. இங்கே இருக்கின்ற தாழ்ந்த சாதிகள், சாப் (Sab) எனப்படுகின்றன. மொத்த மக்கள் தொகையில் இவர்களின் விழுக்காடு ஒரு சதவீதம் மட்டுமே. இவர்களுக்கு நிலப்பரப்பு அல்லது மரபு வரிசை அல்லது இன அடிப்படைகள் இல்லை.