சான்றோன்

...எனும் ஒற்றைச் சொல்!


ஈன்று புறந்தருதல் என்ற புறப்பாடலில் மறத்தி பாடுவதாக அமைந்த பாடலை சான்றோர் என்ற வார்த்தையை மட்டும் எடுத்துக் கூறப்படுகிறது.    இதே மறத்தகை மைந்தர் போரில் மடிந்ததாக மாபல் யானை என்ற பாடலில் வருகிறது.   அதிலும் சான்றோர் என்கிற வார்த்தை மட்டும் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளபடுகிறது.   ஏனென்றால் மறவர் என்பவர் போர் வீரர் என்று ஏற்றுக் க்கொண்டால் இவர்களின் மறவர் என்பவர் புறக்குடிகள் என்ற வாதம் தோற்றுப் போய்விடும் அல்லவா?

சான்றோன் என்பதற்குப் போர் வீரர் என்று பொருளா அல்லது அறிஞர்,  பண்பாளர் என்பது பொருளா என்பதுதான் வாதத்தின் முதல் கருப்பொருள்.   இதில் மறவரா,   மற்றொருவரா என்கிற வினா எழவில்லை.    நான் பாடல் முழுவதற்கும் பொருள் விளக்கம் சொல்லி இருக்கிறேன்.   இப்போதும் சொல்கிறேன்,   மறவர் என்போர் புறக் குடிகளே.   இந்தப் புறக் குடிகள் தூசிப் படைகளாக (ஆநிரை கவர்வோராக),   பின்னர் சேர்வைகளாக சமூகத்துக்குள் சேர்த்துக் கொள்ளப்பட்ட விதம் பற்றி நான் சொல்லி இருப்பது உங்களுக்கு கண்ணில் படவோ செய்யாது என்பதற்கு நான் பொறுப்பில்லை.   சான்றோன் என்பவன் மறத்தில் மட்டுமின்றி அறத்திலும் பயிற்சி பெற்றவன் என்பதையும் பலமுறை சொல்லிவிட்டேன்.   அதை எல்லாம் கவனிக்காதது தங்களின் ஆர்வமின்மையைக் காட்டுகிறது.

 

சமூகக்தின் வெளியே இருந்த பலரையும் பழக்கி,   உள்ளே சேர்த்துக் கொள்வதுதான் பார்ப்பன, க்ஷத்ரியக் கூட்டணியின் தன்மை என்பதை விளக்கி இருக்கிறேன்.   அது உங்களின் கண்ணில் படாமல் போனதற்கு தங்களின் பாரபட்சமான நோக்கு நிலையே காரணம்.   நான் மொத்ததையும் எடுத்துக் கொண்டு பேசுபவன் என்பதைக் காட்டத்தான் முதலில் ஒரு தத்துவார்த்த சட்டகத்தைக் கொடுத்துவிட்டுப் பின்னர் விவாதத்திற்குள் இறங்கினேன்.

"ஈன்ற பொழுதினும் ..."   என்கிற குறளைச்சொல்லி அதற்குச் சொல்லப்பட்ட விளக்கத்தைக் கொடுத்தீர்கள்.   அதே   ஈன்ற பொழுதினும் என்கிற பொருள் பட,   "ஈன்ற ஞான்றினும் பெரிதுவந்தனளே"   எனக் குறிப்புள்ள இரண்டு புறப் பாடல்கள் எடுத்துக்காட்டப் பட்டுள்ளன.   அந்த இரண்டு பாடல்களிலுமே,   தனது மகன் செருக்களத்தில் சமர்புரிந்து மடிந்ததற்காகவே அத்தாய் உவந்தாளே தவிர,   தன்மகன் அறிஞன்,   பண்பாளன் என்று பெயர் பெற்றதற்காக உவந்ததாக இல்லை.

அப்படி ஒரு பாடலை நீங்கள்,   அதிலும் அதே வரிகள் வருவதுபோலக் காட்டமுடியுமா?   ஏதாவது ஒரு பாடல்,   தன் மகன் அறிஞன்,   பண்பாளன் எனப் பெயர் எடுத்ததற்காக உவந்த தாயை சங்கப் பாடல்களில் இருந்து காட்டுங்களேன்!

 

-*-*-*-*-*-*-

புறநானூற்றில் 'நன்னடை' என்றுதான் உள்ளது தாங்கள் தான் "தண்ணடை" என்கிறீர்கள்

 

சேர பரம்பரையைச் சேர்ந்த ஐயனாரிதன் இயற்றிய புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் சாமுண்டி தேவநாகரியற்றிய உரையும்.  உ.வே.சா. பதிப்பு (9ம் பதிப்பு 1963) பக் 25.   வஞ்சிப்படலம்: (சூத்திரம் 8)   48 முதுமொழி வஞ்சி.

 

தொன்மரபின் வாட்குடியின்
முன்னோனது நிலை கிளந்தன்று.

 

(பொருள்):   பழைய வரலாற்றினுடைத்தாய வாளினுடைய மறக் குடியில் தமப்பனுடைய நிலைமையைச் சொல்லியது என்றவாறு.

 

எடுத்துக்காட்டு:

 

"குளிறு முரசங் குணில்பாயக் கூடார்
ஒளிறுவாள் வெள்ள முழக்கிக் - களிறெறிந்து
புண்ணொடு வந்தான் புதல்வற்குப் பூங்கழலோய்
தண்ணடை நல்கல் தகும்."

 

பொருள்:  முழங்கும் வீர முரசிலே கடிப்புத்தாக்கப் பகைவருடைய விட்டு விளங்கும் வாள் வெள்ளத்தைத் துகைத்து யானையை வெட்டிப் புண்ணுடனே வந்தொழிந்தவனுடைய மகனுக்கு,    பொலிந்த வீரக் கழலினையுடையோய்,    மருத நிலங்களைக் கொடுத்தல் தக்கதாம் என்றவாறு. 

ஒளிறுவாள் அருஞ்சமருருக்கிக் களிறெய்வது காளையின் கடன் இல்லையா?    இங்கே அவனுக்கு நன்னடை நல்கப்படச் சொல்லி இருக்கிறதா அல்லது தண்ணடை நல்கச் சொல்லி இருக்கிறதா?

 

-*-*-*-*-*-

 

நால் வகுப்பினருள்ளும் வேளாளனே அமைச்சுத்தொழிலுக்கு ஏற்றவன் என்று ஒளவையார் குலோத்துங்க சோழனிடம் கூறியது.

நூலெனிலோ கோல் சாயும் நுந்தமரேல் வெஞ்சமராம் கோலெனிலோ ஆங்கே குடிசாயும் - நாலவான் மந்திரியும் ஆவான் வழிக்குத் துணையவான் அந்த அரசே அரசு.

வேளாட்டி மக்களின் ஆதிக்கமும்,   சமூகக் குழப்பமும் உச்சத்தில் இருந்த காலத்தில் ஒளவை பாடியது இது.   களப்பிரர் காலத்தில் தொடங்கிய ஒரு சமூக செயல்முறை உச்சத்தை எட்டிய காலமது.   குலோத்துங்கனுக்கு அப்படி ஒரு நெருக்கடி!   வரலாற்றைப் படிப்பவர்களுக்கு இது நன்கு தெரியும்.

இதிலே கவனிக்க வேண்டியது எது தெரியுமா?   'நாலாவான்'   என்பதுதான்.   அவ்வளவு ஆதிக்க நிலைமைக்கு வந்த பின்னரும் வேளாளரை முதலாவதாக,   அல்லது இரண்டாவதாக அல்லது மூன்றாவதாகச் சொல்லாமல் நான்காவது பாலாகவே (வருணமாகவே) சொல்லி இருப்பதுதான்.

-*-*-*-*-*-

பொய்யுடை யொருவன் சொல்வன்மையினால்
மெய்போலும்மே மெய்போலும்மே

மெய்யுடை யொருவன் சொலமாட்டாமையல்
பொய்போலும்மே பொய்போலும்மே

 

கடந்த பல நூற்றாண்டுகளாக,   குறிப்பாக திராவிட இயக்கம் தோன்றியதில் தொடங்கி கனகசபைப் பிள்ளை தொடங்கி,   வேளாள ஆதிக்கம்,   பார்ப்பனர் தவிர்த்த அனைவரும் சூத்திரர் என்று பொய்யை மெய்யாகவும்,   வேளாளர் நான்காம் வருணத்தார் என்பதால் இங்கே தமிழ் நாட்டில் வருணமே இருந்ததில்லை என மெய்யை பொய்யாகவும் தங்களின் சொல்வன்மைக் (எதிரில் யாரும் பேசாதபோது முனகுபவன் கூட சொல் வன்மைக்காரந்தான்) கொண்டு திரித்துப் புரட்டியதை இன்று நேர்செய்கிறோமே என்பதில் ஆத்திரம் வந்தாலும்,   உண்மை தனக்கே உரிய வீரியத்துடன் தான் வெளிப்படும்,   உண்மைக்குப் புலம்பல் தேவை இல்லை!

-*-*-*-*-*-

அறிஞர்கள் எவருமே சான்றோர் என்பது அரசனையோ, போர்வீரனையோ குறிக்கும் என எங்குமே சொல்லவில்லை.

 

சான்றாண்மை என்கிற அதிகாரத்தை பொருட்பாலில் திருவள்ளுவர் வைத்ததன் நோக்கம் என்ன?    களப்பிரர் கால மாற்றங்கள் இலக்கியங்களிலும் பிரதிபலித்துள்ளதை ஏற்கெனவே எடுத்துச் சொல்லி இருக்கிறேன்.    இப்போதும் சொல்கிறேன்:   ஆளும் வர்க்கத்தின் உயர்ந்தபட்ச நற்பண்பு சான்றாண்மையாகும்.    அதனால்தான் தண்டநீதி வழங்குபவனாக அவன் இருக்கிறான்.   சான்றாண்மை என்பது அறத்துப் பாலில் ஓர் அதிகாரமாக இடம்பெறாமல்,   அரசியல் தொடர்பான நீதிகளைக் கூறும் பொருட்பால் என்கிற பகுப்பில் வைக்கப்பட்டிருப்பதன் நோக்கத்தை உணரலாம்.

மேலும்,    சங்ககாலப் பாடல்கள் அதிகமும் வீரயுகத் தன்மை மிகுந்தவை.    களப்பிரர் கால அரசியல்,    சமூக மாற்றங்களின் விளைவாக வீர யுகத்தன்மை சற்று குறைந்தும்,    வணிக - வேளாள வர்க்கத்தின் தன்மைகள் அதிக அளவில் உள்ளடக்கக் கூறுகளாகக் கொண்ட ஒரு ஆளும் வர்க்கம் எழுச்சி பெற்று வந்ததைச் சொல்லி இருக்கிறோம்.    இந்நிலையிலும் சான்றாண்மை அதிகாரம் பொருட்பாலில் இடம் பெற்றுள்ளதன் முக்கியத்துவத்தை மேற்படி மாற்றங்களின் பின்னணியில் பார்க்கையில் புரிந்து கொள்ளமுடியும்.

சான்றாண்மை:   அஃதாவது,   பலகுணங்களானும் நிறைந்து அவற்றை ஆளுதல் தன்மை.   பலகுணங்களானும் என்பது சாலுதல் தொழிலால் பெறப்படுதலின் அவற்றை என்பது வருவிக்கப்பட்டது.    பெருமை (முன் அதிகாரம்) யுள் அடங்காத குணங்கள் பலவற்றையும் தொகுத்துக் கொண்டு நிற்றலின் இஃது அதன்பின் வைக்கப்பட்டது.

பரிப்பெருமாள்,   மணக்குடவர்:   சான்றாண்மையாவது நற்குணங்கள் பலவற்றானும் அமைந்தார் இலக்கணம் கூறுதல்.    இது பெரும்பான்மையும் அறத்தினால் தலையளிச் செய்தொழுகுவாரை நோக்கிற்று.

தளையளி என்பதன் பொருள்,    தலைமை தாங்கி நிர்வகித்தல் என்பதால் அரசனுக்கே பொருந்துமே தவிர அறிஞர்களுக்கல்ல.    சங்ககாலத்தில் தண்டநீதி வழங்கியவர்கள் அரசர்களே தவிர அறிஞர்கள் அல்ல.    அறிஞர்கள் ஆலோசகர்களாக வேண்டுமானால் இருக்கலாம்.

பரிமேலழகர் உரையை நான் எடுத்துச் சொல்வது நேரம் தொடர்பானதே தவிர,   நேர்மை தொடர்பானதல்ல.   பரிமேலழகர் எனக்கு எதிராக எதுவும் சொல்லி விடவில்லை என்பதை உணர்ந்துகொள்வது சற்று கடினம்தான்.   குறிப்பிட்டுள்ளவர்களின் தமிழ்ப் புலமையை நான் ஒருக்காலும் சந்தேகிக்கமாட்டேன்.   ஆனால் சிலருக்கு தொல்காப்பிய உரைகளும்,   நிகண்டுகளும், புறப்பொருள் வெண்பாமாலை போன்ற நூல்களுமே நம்பகத் தன்மை இல்லாத நூல்களாகத் தெரிகின்றன.

சான்றாண்மை என்பது குடியியல் எனும் பகுதியில் வருகிறது?    அரசர் சம்பந்தப்பட்டதாக இருந்தால் அரசியல் எனும் பகுதியில் அல்லவா வரவேண்டும்?

தீ நட்பு,    கூடா நட்பு,    வரைவின் மகளிர்,    கள்ளுணாமை,    சூது,    மருந்து ஆகிய அதிகாரங்கள் அறத்துப் பாலில் சொல்லப்படாமல் பொருட்பாலில் சொல்லப்பட்டிருப்பது ஏன்?

 

ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே!
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே!
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!
ஒளிறு வால் அருஞ்சமம் முருக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே!

புறநானூறு
   (பொன்முடியார்) 

இந்தப் பாடலில் தாய் பெற்றெடுக்கிறாள்.    தந்தை அவனை சான்றோன் ஆக்குகிறான்.   சான்றோன் ஆன அம்மகனுக்கு,   என்ன கடன் என்று பொன்முடியார் உரைத்திருக்கிறார்?   அறிஞர்கள் அவையில் அறிஞன் என்று பெயர் வாங்க வேண்டும் என்றா?    இல்லையே!

 

அந்தத் தாய் பெற்ற பிள்ளையைத்தான் காளை என்று குறிப்பிடுகிறார்.   அந்தக் காளையின் கடமை ஒளிர்கின்ற வாளைப் பயன்படுத்தி,    அரிய போரை நடத்தி அதில் யானையை வீழ்த்தி மீண்டு வருதல் என்பதுதானே சொல்லப்பட்டுள்ளது?

மேற்படி பாடலில் ஒரு பாட பேதம் உள்ளது.    நன்னடை என்பது தண்ணடை என்று இருக்கவேண்டும்.    அதற்குப் பொருள் வேந்தன் அவனுக்கு (நீர் நிரம்பிய குளிர்ந்த) மருத நிலத்தை (ஆட்சிப் பகுதியாக) வழங்க வேண்டும் என்பது.

 

அடுத்த புறனாநூற்றுப் பாடல்:

 

சேரமான் குடக்கோ கொடுஞ்சேரலாதனுக்கும் வேல்பஃறடக்கை பெருவிரற்கிள்ளி சோழனுக்கும் நிகழ்ந்த போர் பற்றி அவைக்களத்தில் பரணர் பாடுகிறார்: 

..... எனைப் பல்
யானையு மம்பொடு துலங்கி
விலைக்கும் வினையின்றி படையொழிந்தனவே.
விறல்புகல் மாண்ட புரவியெல்லாம்
மறத்தகை மைந்தரோடு மாண்டு பட்டனவே.
தேர்தர வந்த சான்றோரெல்லாம்
தோள் கண் மறைப்ப ஒருங்கு மாய்ந்தனரே.

பொருள்:    யானைகள் அம்புகளினால் வீழ்த்தப்பட்டு மாண்டு ஒழிந்தன.    குதிரைப் படை குதிரைகளெல்லாம் அதில் இருந்த வீரருடன் மாண்டன.    தேரில் வந்து போரிட்ட சான்றோர்கள் மொத்தமாக மாய்ந்தனர் என்பதாகும்.

போர்க் களத்தில் தேரில் வந்து மாய்ந்து போக வேண்டும் என்பது அறிஞரின் கடமையா?

விரிவிளக்கம் காண:

 

1) மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் கட்டுரைகள் -  தொகுதி 2. மக்கள் வெளியீடு,   முதற் பதிப்பு 2001
2) தமிழ் வீரநிலைக் கவிதை,    கலாநிதி கைலாசபதி,  குமரன் புத்தக இல்லம் வெளியீடு,    இலங்கை 2006.

 

இதை சரிபார்த்துக் கொள்ளும் வகையில் நமக்கு வேறு சில ஆதாரங்களும் உள்ளன.    ஒவ்வொரு சமூகமும் தனக்கே உரிய வாய்மொழி வரலாறு,    கதைப்பாடல்,    செப்பேடு,    புராணங்களை வைத்துள்ளன.    இதில் சாணார்களின் இலக்கியமான வலங்கை மாலை,    வெங்கலராஜன் கதை, திருமுருகன் பூண்டி செப்பேடு,    அவல்பூந்துறை செப்பேடு போன்றவையும் அவர்களை சான்றோர் ஆகவே சொல்லுகின்றன.  


வேளாளர்களின் இலக்கியமான    'மரபாளபுராணம்'    அவர்களை பூமி புத்திரராகவே குறிப்பிடுகிறதே தவிர சான்றோர் ஆக அல்ல.    ஒவ்வொருவரும் அவர்களின் விருப்பத்திற்கு   'சான்றோன்'    என்று குறிப்பிட்டுக் கொண்டிருக்கலாம் அல்லவா?    ஏன் அப்படி குறிப்பிட்டுக் கொள்ளவில்லை?

சான்றோன் ஆக்குவது என்றால்,    எல்லோரும் சான்றோன் இல்லை என்றாகிறது இல்லையா என்பது  வினா.    ஒரு சிறுபகுதியையேனும் ஆட்சி செய்பவந்தான் க்ஷத்ரியன்.   மகாபாரதத்தில் பாண்டவர்களுக்காகத் தூது போகும் கண்ணன்,    ஐவருக்கும் தலைக்கு ஒரு கிராமம் என்று ஐந்து கிராமங்களையாவது தரும்படி வேண்டுவான் இல்லையா?    எதற்கு அப்படி கேட்கிறான்?   அப்போதுதான் அவர்கள் க்ஷத்ரியர் அந்தஸ்தில் இருக்கமுடியும் என்பதுதான் காரணம்.    'தண்ணடை நல்கல் வேந்தர்க்குக் கடனே'    என்பது,   சான்றோனுக்கு ஆட்சிப் பகுதி இருக்கவேண்டும் என்பதையே குறிக்கும்.    பல தனிப் பாடல்கள் 'மகுட தியாகி'    என்கிற ஒன்றைக் குறிப்பிட்டுள்ளன.    அவன் சான்றோனுக்குரிய தகுதிகளைப் பெற்றும் ஆட்சிப் பகுதி இன்றி இருப்பதால் அவன் 'மகுட தியாகி'   என குறிப்பிடப் படுகிறான். 

 

இந்த மகுட தியாகிகள் தான் 'வாளின் வாழ்நர்'    என சங்க இலக்கியங்களில் குறிக்கப்படுபவர்கள்.    பின்னாளில் கல்வெட்டுகளில் 'நிழலும் பணியும்'   என்று குறிப்பிடப்படுவதில் 'நிழல்'   என்போரும் இந்த வாளின் வாழ்நரே.    இவர்கள் சான்றோரின் ரத்த உறவினர் என்பதால்தான் 'நிழல்'   எனக் குறிப்பிடப்படுகின்றனர். 
 
ஏற்கெனவே சான்றோர் இனத்தில் பிறந்த ஒருவனை மீன்டும் சான்றோன் ஆக்குதல் என்றால் என்ன பொருள்?

நீதி நூல்கள் அதிகமும் தோன்றிய களப்பிரர் காலத்தில் இருந்தே பலமாற்றங்கள் தொடங்கியதை நான் எனது நீண்ட பதிவில் முன்பே சொல்லி இருக்கிறேன்.    திருக்குறளும் கூட அக்காலத்தைச் சேர்ந்த நூல் என்பதையும் முன்பே குறிப்பிட்டு இருக்கிறேன்.    மேலும்,    அவை என்றால்,   ஐம்பெரும் குழு,    எண்பேராயம் போன்றவை ஒப்பிடத்தக்கன.    இவை ஆட்சி நிர்வாகம் தொடர்பானவை.

மேலும் அக்கால இலக்கியங்கள்  'உயர்ந்தவர்களை'  அதாவது,   'எலைட்' என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே,    அவர்கள் பற்றியே பேசும்.    அதனால்தான்   'உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே' என்று சொல்லப்பட்டது.

 

அறிஞர் எனப் படுபவரை சங்கம் என்னவென்று அழைத்தது?

 

தொல்காப்பியம் சங்க கால நூல் என்பதில் அனேகமாக யாரும் மறுப்பு சொல்லமாட்டார்கள்.    தொல்காப்பியர் அறிஞர் என்பதைத்தான் புலவர் என்கிறார்.    குறிப்பாக பொருளதிகாரத்தில் பழைய மரபுகளைக் குறிப்பிடும்போது    'என்மனார் புலவர்'    என்று குறிப்பிடுவது அறிஞர்களையே குறிக்கும்.

 

புலவர் என்றால் தற்போது நாம் நினைக்கிற மொழிப் புலமை என்பது மட்டும் அல்ல,   பாண்டித்தியம்,   என்கிற பொதுவான பொருள்தான்.    அது எந்தத் துறைக்கும் பொருந்தும் சொல்.    ஆனால் தமிழில் புலவர் பட்டம் வழங்கி,    அது பாடல் சார்ந்த புலமை என்பதாக,    மொழி சார்ந்ததாக ஆக்கப்பட்டுள்ளது.
அதே தொல்காப்பியர் சான்றோர் என்கிற சொல்லை 2 அல்லது 3  இடங்களில் பயன்படுத்துகிறார். என்ன பொருளில்?    நிச்சயமாக அறிஞர் என்கிற பொருளில் அல்ல!

இவ்வாறாக,    அக்காலத்தில் 'புலவர்'   என்கிற சொல்லே, அறிஞர்களைக் குறித்து நின்றது.

 

ஆதாரங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது.

 

இதோ நான் பட்டியல் தருகிறேன்:

 

(1)  தொல்காப்பியம்.
(2)  தொல்காப்பியம்,   பொருளதிகார உரை,   இளம்பூரணர்.
(3)  தொல்காப்பியம்,   பொருளதிகாரம்,   நச்சினார்க்கினியர்.
(4)  சேந்தன் திவாகரம்
(5)  சூளாமணி நிகண்டு
(6)  பிங்கல நிகண்டு
(7)  வடமலை நிகண்டு
(8)  பாரதிதீபம்
(9)  சதுரகராதி
(10)கதிரைவேற்பிள்ளை அகராதி.

இந்த நூல்களின் நம்பகத்தன்மை வினாக்குரியது என்றால்,    தமிழ் வரலாறே வினாக்குரியது என்று பொருள் என்பதை தமிழ்கூறு நல்லுலகம் அறியும்.    வேளாளர் மகற்கொடைக்குறியோர் என்பது பற்றி வேளாள அறிஞர்கள் பலரும் எழுதி இருக்கின்றனர்.   மகற்கொடை என்றால் என்ன?   மகளை கொடையாக,   பரிசாகத் தரவேண்டும் என்று பொருள்.   மகளைத் தரலாமே தவிர பெண் எடுக்கமுடியாது.

 

கேரள நாயர்களுக்கும் நம்பூதிரிகளுக்குமான உறவு பற்றி பலரும் எழுதி இருக்கின்றனர்.   அதில் நாயர் பெண்களின் (நாயர் = வேளாளர்)  திருமண முறை பற்றி திரு. பக்தவச்சல பாரதி "பண்பாட்டு மானுடவியல்"  நூலில் சொல்லி இருக்கிறார்.    கார்காத்த வேளாளர் பற்றி வெள்ளைக்காரர் நெல்சன் தொகுத்த 'மதுரா மேனுவல்'   காண்க.   இந்த நூல்களெல்லாம் நம்பிக்கைக்குரியன.


வேளார் = குயவர்.    இன்றைக்கும் கூட தென் மாவட்ட கிராமங்களில் ஐயனார் கோயில்களில் சில பூஜைகளை அவர்கள் செய்வது உண்டு.    இன்றைக்கும் அவர்கள் வேளார் என்று அழைக்கப் படுகிறார்கள்.    விசாரித்துத் தெரிந்துகொள்ளவும்.

 

சங்க இலக்கியத்தில் 'வேட்கோவர்'   என்றொரு குறிப்பு உண்டு.    இதன் பொருள் வேள்வி செய்யக்கூடிய குயவர் என்பதாகும்.    'கலம் செய் கோவே, கலம் செய் கோவே'    எனத் தொடங்கும் சங்க இலக்கியப்பாடல், இதற்கு மற்றோர் சான்று.   10 ஆம் நூற்றாண்டு தொடங்கி,   'வேளான்'   என நில வரி நிர்வாக அதிகாரிகள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.    இந்த வேளான் என்பதில் 'ன்'   என முடியும். இந்த   'வேளான்'   எனப்பட்ட அதிகாரிகள் பல சாதிகளில் இருந்தும் இருந்திருக்கின்றனர்.
மாறாக,   'வேளாண்'   வாயில் என்பதில் 'ண்'   என முடியும்.

 

உழுபவருக்கு வேளாண் என்ற குடிப்பெயர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வழங்கியது. வேளாண் என்பதற்கு உபகாரி என்று பொருள்.

வேளாண்மை என்பதற்கு உபகாரி என்று பொருள் என்றுதான் நானும் சொல்கிறேன்.   ஆனால் இது மட்டுமின்றி மெய்யுபசாரமும் சொல்லப்பட்டு இருக்கிறது.   அதுவும் ஒருவகை உபகாரம்தானே?   ஆனால் விவசாயம் அல்லது பயிர்த்தொழில் என்று பொருள் அல்ல என்பதுதான் விஷயம்.   
'ஆணை வழி நிற்றல்'    என்பதும் வேளாளர் கடமைகளில் ஒன்று.    குயிலுவம்,    காருகவினை என்பதெல்லாமும் அவர்களின் கடமைதான்.

கி.பி.12 ம் நூற்றாண்டு சோழர் கல்வெட்டு ஒன்றில் வரும் வாசகம்:   "பெருங்குடிகள் பேரால் கடமைக்கு வெள்ளாழரைச் சிறைப்பிடித்தல் இவர்கள் அங்கங்களில் ஒடுக்குதல் செய்யக் கடவதல்லாததாகவும்"   என்கிறது.


இதன் பொருள்:    பெருங்குடிகள் செலுத்தவேண்டிய வரிக்காக அந்தப் பெருங்குடியிடம் வாரக்குடியாக இருக்கும் வெள்ளாளரைச் சிறைப்பிடிக்கும் வழக்கம் நடைமுறையில் இருந்து இக்கல்வெட்டு மூலம் தடை செய்யப்பட்டதையும் குறிக்கும்.    இப்படி அடுத்தவருக்காக சிறைபிடிக்கத்தக்கவராக இருந்தவர்கள் அரச குலமாம்!   வேடிக்கைதான்.

சங்க கால வேந்தர்கள் தெளிவான ஆண்வழி சமூகத்தவர் ஆவர்.    ஆனால் வேளாளர்களோ பெண் வழி சமூகத்தவர்.    மிகப் பிற்காலத்தில் கூட 'மருமக்கள் வழி மான்மியம்'   எழுதிப் பெருமைப்பட்டுக் கொண்டவர்கள்.  

 

உடன்கட்டை ஏறுதல் என்பது ஆணாதிக்கத்தின்,   கற்பு நெறியின் உச்சம் என்று சொல்லலாம். பூதப்பாண்டியன் மனைவி பெருங்கோப்பெண்டுவிடம் பூதப்பாண்டியன் இறந்ததும் அவளை ஆட்சிப் பொறுப்பு ஏற்குமாறு அவளது சுற்றத்தார் வலியுறுத்த,   அவள் அதை மறுத்துவிட்டதை  "பல் சான்றீரே பல் சான்றீரே / பொல்லாச் சூழ்ச்சிப் பல் சான்றீரே..."   என்று தொடங்கும் பாடலில் சொல்வதைக் கேளுங்கள்.

 

வேளாளர்களோ நெடுங்காலம் மண வினைச் சடங்குகள் இல்லாமல் இருந்து பின்னர் அவர்களிடம் பொய் சொல்வதும்,   மரபு வழுவுவதும் ஏற்பட்ட பிறகு மண வினைச் சடங்கு (கரணம்)   ஏற்படுத்தி வைக்கப்பட்டது.    எனவே எந்த வகையிலும் அவர்கள் மேற்படி பாடலில் இருந்த இலக்கணத்தைப் பின்பற்றியிருக்கமாட்டர்.   "மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே" - தொல்

 

"வேற்றுமை தெரிந்த நாற்பால்"  அப்படியானால் நாலு வர்ணமா?

 

நான் அந்தப் பாடல் (புறம் 183) முழுவதையும் எடுத்துப்போட்டுப் பேசத் தயார்.   அதற்கு முன்பாக சில விவரங்களைத் தெளிவு படுத்திக்கொள்ள விரும்புகிறேன்.

"உற்றுழி..."   எனத்தொடங்கும் அப்பாடலின் கடைசி 3 வரிகள் "வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பா லொருவன் கற்பின் மேற்பா லொருவனு மவன்கட் படுமே"   என்பது.


இதில் உயர்ந்த தாழ்ந்த என்று சொல்லத்தக்க மேல்,   கீழ் என 4 அடுக்குகள் சமூகத்தில் இருந்ததைக் காட்டுகிறது இல்லையா?   இந்த மேல் கீழ் பிரிவுகள் எதை/எவற்றை அடிப்படையாகக் கொண்ட(து) வை? 

"ஈன்றுபுறந் தருத லென்றலைக் கடனே ...." என்று தொடங்கும் பாடலை எந்தச் சூழலில் எடுத்துக்காட்டப்பட்டது என்பது முதல் வினா.    'சான்றோன்'  எனும் சொல்லுக்கு 'போர் வீரர்' என்பதுதான் பொருள்.

தாய்,    தந்தை,    கொல்லர்,    வேந்தன் ஆகியோருக்கான கடமைகள் சொன்ன அப்பாடல் மகனின் கடமையைச் சொல்லி இருக்கிறதா இல்லையா என்பதுதான் அடிப்படையான வினா.    மகனைத்தான் 'காளை'   என்று சொல்லியிருக்கிறது என நான் கூறினேன்.    "ஒளிறு வா ளருஞ்சமம் முருக்கிக் களிறெறிந்து பெயர்தல்"   அவனுக்குக் கடனேயன்றி படித்த அறிஞர்கள் மத்தியில் அவர்களைவிடக் கற்றறிந்தவன் எனப் பெயர் வாங்குவது அவனுக்குக் கடனாகச் சொல்லப்படவில்லை என்பதனால்,    'வீரன்'   என்கிற பொருளே சரி என்று நான் உரைத்தேன்.

புறநானூறு,   உ. வே. சா.   பதிப்பில் கண்ட அரும்பத அகராதியில்,   சான்றோர் = அமைந்தோர்,  போர் வீரர்.   புலவர் = அறிவுடையோர்,    புலமையுடையோர்.

                                                                                                                 

      

{ParagraphsSidebar}